Saturday, October 31, 2009

551.சென்னையில் தொலைந்து போனவர்கள்!

அன்று காலையில் "டியாப்பம் டியாப்பம்" என்று கூவிக்கொண்டு சைக்கிளில் சென்றவரைப் பார்க்கையில், சில மலரும் நினைவுகள் தோன்றின. நமது இந்த அவசர, "வளர்ச்சி" அடைந்த வாழ்க்கையின் காரணமாக, எத்தனை மனிதர்கள் தொலைந்து போய் விட்டார்கள், இந்த மாநகரத்திலிருந்து! கிராமங்களில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!

என் பள்ளி நாட்களில், திருவல்லிக்கேணியின் தெருக்களில் பலவகையான மனிதர்கள் உலா வந்தார்கள்! "உப்புத் தாத்தா"வை மறக்கவே முடியாது. ஒரு பெரிய சாக்குப்பை நிறைய கல் உப்பை கைவண்டியில் இட்டு, வாரம் ஒரு முறை எங்கள் தெருவில் "உப்பேய், உப்பேய்" என்று கூவிக்கூவி விற்பார். எல்லாரும் வாங்குவார்கள். ஒரு படி நாலணா என்று ஞாபகம். அப்போதெல்லாம் யாரும் "ஐயோடைஸ்ட் சால்ட்" உபயோகித்தது இல்லை!!

அது போலவே, திருவள்ளுர்/செங்கல்பட்டு அருகே இருந்த கிராமங்களிலிருந்து பருப்பு, புளி, குண்டு மிளகாய் போன்ற சாமான்களை எடுத்து வந்து சென்னையில் ரெகுலராக விற்று வந்தனர். பளபளவென்ற மூங்கில் கூடைகளில் கலப்படமில்லா சரக்கை, நியாயமான விலைக்கு விற்றனர். அரிசிக்காரர்கள் பெரும்பாலும் தெலுங்கர்களே.

ஆந்திரத்தில்(முக்கியமாய் நெல்லூர்) விளைந்த அரிசியை வீட்டுக்கே எடுத்து வந்து அளந்து போடுவர். படிக்கணக்கு தான், கிலோவெல்லாம் கிடையாது. படி 5-6 ரூபாய் தான்.

அரிசிக்காரருடன் ஒரு கூலியாள் மூட்டை அரிசியை முதுகில் தூக்கி வந்து, அத்தனை அரிசியையும் ரேழியில் கொட்டிவிட்டு, அளந்து போடும் அந்தக் காட்சி அலாதியான சுவாரசியம்! அரிசிக்காரர் படி எண்ணிக்கையை சத்தமாக தெலுங்கில் அறிவிக்க, கூலியாள் அரிசியை படியில் இட்டு எங்கள் அரிசி டின்னில் கொட்டுவார். அவர் நிலைமை தான் பரிதாபம், என் பாட்டி (அரிசியை படியில்) 'கூம்பாகப் போடு' என்பார், அரிசிக்காரரோ தெலுங்கில் "தட்டிப்போடு" என்று கட்டளையிடுவார் :)

காஞ்சிபுர வியாபாரி ஒருவர் பளபளக்கும் வெண்ணையை தகர டின்னிலும், நெய்யை ஹார்லிக்ஸ் பாட்டில்களிலும் வீட்டுக்கே எடுத்து வந்து விற்பனை செய்வார். பணத்தையும் தவணை முறையில் வாங்கிக் கொள்வார். போனஸாக சின்னப் பசங்க எங்களுக்கு கொஞ்சம் வெண்ணெய் கொடுத்து விட்டுத் தான் புறப்படுவார்! அதை சர்க்கரையைத் தொட்டுத் தின்போம்.

அழகான மண்பானையில் தயிர் எடுத்து வந்து விற்ற ஆயாவையும் மறக்க முடியாது. அது போல ருசியான, சற்று புளிப்பான தயிர் இன்று வரை கிடைக்கவில்லை!

"கோல மாவேய் கோல மாவேய்" என்று கோலம் போடும் மாவை வீதியில் விற்ற காலமும் மலையேறி விட்டது, இங்கொன்று அங்கொன்று என்று சிலர் விற்றாலும் கூட! அதற்கு மொக்குமாவு என்ற பெயரும் உண்டு.

இப்போது, அவரவர் தங்கள் ஃபிளாட் வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை நிரந்தரமாக ஒட்டி விட்டு, அதை தினமும் துடைத்து விடுகிறார்கள் :) சிலர், மொத்தையாக உள்ள ஒரு சாக்குக்கட்டியால் தாரேபூரே என்று ஒரு கோலம் போடுகிறார்கள்! என்ன கொடுமை பாருங்கள்! இதனால் தான், கோலம் போடும் போட்டியெல்லாம் வைத்து, அந்த பாரம்பரியக் கலையை இப்போது காப்பாற்ற வேண்டியுள்ளது :)

பால்காரர் வீட்டுக்கு வந்து பால் தருவதும் அரிதாகி விட்டது. எருமைப்பால், பசும்பால் எல்லாம் போய், ஆவின் பால், ஆரோக்கியா பால் வந்து பலகாலமாகி விட்டது! மிச்சம் மீதியுள்ள பால்காரர்கள் பாலை ஹோட்டலுக்கு விற்று வருகின்றனர்! தெருவில் அலையும் மாடுகள் ஆவின் பிளாஸ்டிக் கவர்களை சாப்பிடுகின்றன :)

ஊதுவத்தி, கற்பூரம் மற்றும் சின்னச்சின்ன அழகுச்சாதனங்களை விற்க வரும் பெண்களை, காவல்காரர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் போகவே விட மாட்டார்.

சூப்பர் மார்க்கெட் கலாச்சாரமும், அவசர, துட்டுக்கு அலையும் அவல வாழ்க்கையும் அவர்களையெல்லாம் துரத்தி விட்டது. மனிதரை மனிதர் நம்ப முடியாத ஒரு சூழலால், யாரையும் வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க பயமாயிருப்பதுவும் ஒரு காரணம் தான்.

நமது "use & throw" என்ற அமெரிக்கரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கத்தால், காணாமல் போனவர் சிலருண்டு.பழைய பாட்டில்களையும், இரும்புச் சமாச்சாரங்களையும், பாலிதின் பால் கவர்களையும் விலைக்குப் போட்டுக் கொண்டிருந்த காலம் போய், அவையெல்லாம் இப்போது நேராக குப்பைத்தொட்டிக்கு போய் விடுகின்றனர். இது சுற்றுப்புற சுகாதார சீரழிவுக்கு வழிவகுக்கிறது. முன்பெல்லாம், பழைய துணிகளை சேர்த்து வைத்து பாத்திரக்காரரிடம் போட்டு பாத்திரம்/பிளாஸ்டிக் சாமாங்கள் வாங்குவார்கள்.

பழைய துணிகள் + பணம் என்று cash & kind முறையில் நடந்த வியாபாரம் அது. பாத்திரக்காரர், பல குடித்தனங்கள் உள்ள ஒரு வீட்டில் 2-3 மணி நேரம் உட்கார்ந்து டீலை முடிப்பார்! அடுக்குமாடி குடியிருப்பு நிறைந்த கான்கிரீட் காடாகி விட்ட ஊரில் அவர் கண்ணில் தட்டுப்படுவதே அபூர்வமாகி விட்டது.

அது போலவே, "பிளாஸ்டிக் பக்கிட்டு ரிப்பேய்ர்" என்று கூவியபடி வந்து, ஊதி ஊதி கரியைப் பற்றவைத்து, வாய்/காது அறுந்த பிளாஸ்டிக் பக்கெட்டுகளை அழகாக ஒட்டித் தருபவர்களும் காணாமல் போய் விட்டார்கள்.

கத்தி, கத்திரி, அருவாள்மனை, கூர் தேய்ந்து விட்டால், கூலாக நாம் அவற்றைத் தூக்கிப்போட்டு விட்டு, புதிது வாங்கி விடுகிறோம். அதனால், காலால் மிதித்து சக்கரம் சுழற்றி சாணக்கல்லில் அவற்றைக் கூர் தீட்டித்தரும் சாணக்காரர்களும் வழக்கொழிந்து வருகிறார்கள்.

அந்தக்காலத்தில், அவர்கள் "சாணா பிடிக்கறதே சாணா" என்று கூவிக் கொண்டு வந்தவுடன் வீதிக்கு ஓடிச் செல்வோம். தீப்பொறி பறக்க சாணம் தீட்டுவதை சிறுவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. ஒரு கால் பெடலை மிதிக்க, இரண்டு கைகளாலும் கத்தியை வாகாக பிடித்து, வேகமாக சுழலும் சாணக்கல்லில் அதை லாவகமாக கூர் தீட்ட வேண்டும்!

இவர்களில் தப்பியவர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளிகளும், ரோட்டில் குப்பை பொறுக்குபவர்களும் தான்! ஏனோ செருப்பைத் தைத்து உபயோகிக்கும் வழக்கம் இன்னும் நம்மிடம் இருப்பதால், முன்னவர் சிலர் தெரு ஓரங்களில் இன்னும் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பின்னவர் நம்மை நம்பி இல்லை; சாலையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளையும், அவர் துரத்திச் செல்லும் குப்பை வண்டிகளையும் நம்பி இருப்பதால், அவர்களின் வண்டியும் நகரத்தில் ஒடிக் கொண்டிருக்கிறது!

சரி, இப்படித் தொலைந்து போனவர் வாழ்வில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டு விட்டதா, அவர்கள் பிள்ளைகள் வேறு நல்ல வேலைக்குச் சென்று முன்னுக்கு வந்து விட்டார்களா என்றால், அதுவும் நல்ல அளவில் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை! Inequality is so rampant. இந்த இடுகையின் முடிவில் சுட்டப்பட்டிருக்கும் "உருப்படாதது" நாராயணனின் கட்டுரையை நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்!

நாம் காணும் பொருளாதார வளர்ச்சி என்பது அடித்தட்டு மக்களை சென்றடையவே இல்லை என்பது நிதர்சனம். ஏழைகளை ஏழைகளாக வைத்து அரசியல் நடத்தி, இந்திய ஜனநாயகம் தழைத்து வளர்ந்திருக்கிறது, கூடவே நக்ஸலிசமும் தான் !!!!

எ.அ.பாலா

picture courtesy:
1. Velachery Balu
2. DFID - UK Department for International Development
http://www.flickr.com/photos/balu/3303479445/
http://www.flickr.com/photos/dfid/3316075589/

Sunday, October 11, 2009

550. திரும்பிப் பார்த்த நதிகள், திகைத்து நின்ற ஆந்திரம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. சமீபத்திய நிகழ்வொன்றினால் தமிழ் வலைப்பதிவுலகு அல்லோலகல்லோலப்படும் நேரத்தில் 'இதென்ன கலாட்டா' என்று பிரித்து வாசித்தால், ஆச்சரியம். ஆந்திரா வெள்ளச் சேதம் பற்றி கி.அ.அ.அ எழுதியிருப்பது கண்டு அதிர்ச்சி :-) நல்ல அலசல் என்று தோன்றியதால், அதை உடனே பதிப்பிக்கிறேன். நன்றி.

எ.அ.பாலா
*********************************************






இயற்கையின் சீற்றத்தை மனிதன் ஓரளவிற்கு மேல் தடை போட்டு விட முடியாதுதான்.ஆனால் வரும் செய்திகளைப் பார்த்தால் பேராசையினால் நாமே இந்த இயற்கையின் சீற்றங்களுக்கு துணை போய்,தூண்டுகோலாய் இருந்து அழிவை மேலும் பேரழிவாக்கிக் கொள்கிறோம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

குறிப்பாக ஆந்திராவில் இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட  வெள்ள சேதத்தினால் ஆந்திர கர்நாடக மாநிலங்களில் 250 பேருக்கு மேல் பலி ,15 லட்சம் பேர் வீடிழப்பு மற்றும்15000 கோடி அளவிலான பொருட்சேதம் முதலியவற்றிற்குக் காரணம், மழை மற்றும் இயற்கையின் சீற்றம் என்பதை விட  அரசியல்வாதிகளின் பேராசையும் ஆட்சியாளர்களின் அசட்டையும் கவனக் குறைவும் என்று வரும் செய்திகள் நம்மை திடுக்கிட வைக்கின்றன.

அதிக மழை மற்றும் கட்டுக்கடங்காமல் பாயும் நீரினால், நதிகள் கரைகளை உடைத்துக் கொண்டு வெள்ளப் பெருக்கெடுத்து சேதம் விளைவிப்பதை கேல்விப்பட்டிருக்கிரோம். ஆனால் முதன் முறையாக நதிகளின் பாயும் நீர் , நீரோட்டத்திற்கு எதிராக பின்னோக்கிப் பாய்ந்து  வெள்ள சேதத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லி நம்மை கிடு கிடுக்க வைக்கிறார் ஆந்திர வேளாண்மைத்துறை உயர் அதிகாரி ஒருவர்.


இது ஆரம்பித்ததது, கர்னாடகாவின் கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளின் மழை பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ய ஆரம்பித்ததும்தான்.இந்த இரண்டு நதிகளும் கர்நாடக மாநிலத்தில் தொடங்கி ஆந்திராவில் பாய்கின்றன.  ஆந்திரமும் கர்நாடகமும் நதிகள் மற்றும் நீர் நிலைகளைப் பொருத்த வரை மிக நெருங்கிய தொடர்புடையவை,கர்நாடகாவில் கனமழை எனில் ஆந்திராவில் வெள்ளம் வரும் எனும் அளவிற்கு .எதிர்பாராத கன மழைக்கு ( வழக்கம் போல் ) எந்த முன்னேற்பாடுடனும் இல்லாத கர்நாடக அரசு கிருஷ்ணா நதியில் ஆல்மாட்டி மற்றும் நாராயண்பூர் அணைகளிலிருந்து நீரைத் திறந்து விட ஆரம்பித்தது.

ஒரே நாளில் கிட்டத்தட்ட 8 லட்சம் கியூசெக் நீரை வெளியேற்றியது. இப்படி அதிரடியாக வெளியேற்றப்பட்ட உபரி நீரும் தொடர் கனமழையும் வட கர்நாடகத்தின் பிஜாபூர்,பகல்கோட் மற்றும் பெல்லாரி மாவட்டங்களை வெள்ளக் காடாக்கியது.அதோடு நில்லாமல் உபரி வெள்ளம் ஆந்திராவினுள்ளும் புகுந்தது. ஆனால் "இந்த கட்டுக்கடங்காத வெள்ளத்திற்கு முக்கிய காரணம் மழைக்கு முன் கர்நாடகா அல்மாட்டி அணையை கழுத்து வரை முட்ட முட்ட நீரை நிரப்பி வைத்திருந்ததுதான் .அதனால்தான் மழை அதிகரித்த போது அணையை ஒரு சேரத் திறந்து உபரி நீர வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது" என்கிறர்கள் நிபுணர்கள். ஆனால் " மஹாராஷ்டிரத்திலும் பெய்த கனமழைதான் இப்படி உடனடி அணை திறப்பிற்கு வித்திட்டு விட்டது, இல்லையேல் அணைகளே உடைந்து விடக் கூடிய பேரபாயத்திலிருந்து தப்பிக்கவே இப்படி திறந்து விட்டோம் " என்று சப்பைக் கட்டு கட்டுகிறது கர்நாடக அரசு.

உண்மை எதுவாக இருந்தாலும் இந்த உபரி நீரினால் சீறிப் பாய்ந்த கிருஷ்ணா நதி ஆந்திராவில் ஸ்ரீசைலத்தை ( ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்குக் குறுக்கே அணை கொண்ட முதல் நகரம் ) அடைந்த போது தான் பேரழிவு காத்திருந்தது.பொதுவாக இப்படிப் பட்ட அதிக மழை, வெள்ள காலங்களில்  அதற்கேற்றவாறு அணைகளில் நீர் தேக்கத்தை அமைத்துக் கொள்ள மத்திய நீர் ஆணையம் நதிகளில் வெள்ள நீர்வரத்து மற்றும் அளவுகள் குறித்து அறிக்கை வெளியிடும்,. ஆனால் இதைக் கண்டு கொள்ளாத ஸ்ரீசைலம் அணை நிர்வாகம் அணையிலிருந்து நீரை வெளியேற்றாவே இல்லை.இதில் கொடுமை என்னவென்றால் இப்படி முதலிலேயே நீரை வெளியேற்றியிருந்தாலும் அது வீணாகியிருக்காது.அடுத்ததாக இருந்த வெள்ளத்திற்கு முன்  பாதி கூட நிரம்பாத நிலையில் இருந்த நாகார்ஜுனசாகர் அணையில் சென்று தேங்கியிருக்கும் .

பிறகு ஏன் ஸ்ரீசைலம் அணையைத் திறந்து விட இத்தனை காலதாமதம்? இதற்கு மற்றெல்லாவற்றையும் விட முழு முதல் காரணம் ஆந்திராவின் பாழாய்ப்போன அரசியல்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆந்திராவின் முந்தைய இரண்டு முதலமைச்சர்களான மறைந்த ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடுவும் ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்தவர்கள்.கிருஷ்ணா நதியின் அருகில் இல்லாத இந்த ராயலசீமா பகுதிக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லவேண்டும் என்ற இவர்களது ஆசைதான்  ஸ்ரீசைலம் அணையில் ஏற்கனவே நீர் ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்டதற்க்கு அதிகமாக நீரைத் தேக்கச் சொல்லும் அரசாணையை வெளியிட வைத்தது என்கிறார்கள். மேலும் குறிப்பாக ராஜசேகர ரெட்டியின் பேராசைக்குக் காரணம்  ராயலசீமா பகுதிக்கு குடிநீர் என்பதற்கும் மேலாக தன் மகன் ஜகன் மோகன் ரெட்டி பினாமி பங்குதாரராக இருக்கும் ப்ராமணி உருக்காலைக்கு தண்ணீர் தரவே இந்த ஏற்பாட்டை செய்தார் என்றும் சொல்கிரார்கள்.( இது ஆந்திர சட்டசபையிலும் பெரும் அமளியை முன்னர் கிளப்பியதை பலரும் அறிந்திருக்கலாம்)

இப்படி அளவுக்கதிகமாக சேமிக்கப் பட்ட நீரால் தளும்பிக் கொண்டிருந்த ஸ்ரீசைலம் அணையில் , வெள்ளப் பெருக்குடன் மோதிய கிருஷ்ணாநதி மேலும் முன் செல்ல முடியாமல் மோதிய வேகத்தில் பின்னோக்கிப் பாய ஆரம்பித்தது.முதலில் 150 கி.மி தள்ளியிருந்த கர்னூலை தாக்கிச் சூழ்ந்தது.கர்னூலில் அருகேதான் கிருஷ்ணா நதியும் துங்கபத்ரா நதியும் சங்கமிக்கின்றன.இப்படி முன்னேர முடியாமல் பின்னடைந்த கிருஷ்ணாவின் வேகத்தைத் தங்காமல் ஏற்கனவே வெள்ளப் பெருக்குடன் ஓடிய துங்கபத்திரையும் முன்னே பாய முடியாமல் தத்தளித்தது.

விளைவு , கிருஷ்ணா நதி கர்னூலை மூழ்கடித்தது. நகரம் முழுவதும் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்து மூன்றடுக்குக் கட்டடங்களைக் கூட விட்டு வைக்காமல் மூழ்கடித்தது. அத்தோடு நிற்கவில்லை அவலம்..முன்னேர முடியாத துங்கபத்திரை பின்னோக்கிப் பாய்ந்து கரையிலிருந்த கிராம, நகரங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. அதில் முக்கிய நகரம் ராகவேந்திரர் முக்தி பெற்ற திருத்தலமான மந்திராலயம்.இந்த ஊரில் அமைந்த ராகவேந்திரர் கோவிலின் மடாதிபதியை மூன்றாம் மாடியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றுமளாவு வெள்ளம் சூழ்ந்ததை செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.அதனோடு நில்லாமல் கர்நாடகாவில் வளமான ராய்சூர் பகுதியையும் முழுமையாக மூழ்கடித்து நாசப் படுத்தியது பின்னோக்கி நகர்ந்த துங்கபத்ரா நதி.

ஆந்திராவின் தற்போதைய முதல்வர் ரோசையா,  " அணைகளைத் திறந்து விட்டு, பின் மழை போதிய அளவு பெய்யாமல் அணை நிரம்பவில்லை எனில் அதற்கும் எங்களைத்தான் குறை சொல்வார்கள் " என்று சொல்லி அணைகளில் அதிக நீர் சேமித்ததையும், சரியான நேரத்தில் திறக்காததையும் ஞாயப்படுத்துகிறார். ஆனால் " மழை சீராக 15 முதல் 20 செ.மி அனைத்துப் பகுதிகளிலும் பெய்ததால் ,முதல்வர்  ரோசையா சொல்லும் நிலை கண்டிப்பாக வந்திருக்க வாய்ப்பே இல்லை,  "என்கின்றார்கள் நிபுணர்கள்.

வேறு வழியில்லாமல்,  ஸ்ரீசைலம் அணை திறந்து விடப்பட்ட போது ( இதில் நீண்ட நாள் திறக்காததால் ஒழுங்காக பராமரிக்கப் படாத சில மதகுகள் சரியான நேரத்தில் திறக்காமல் காலை வாரி விட்டது உபரித் தகவல்- கண்டிப்பாக இந்த மதகுகளைப் பராமரித்ததாக கணக்குக் காட்டி சில பல லட்சங்களை சில அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் விழுங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை!!!)

ஒரு வழியாக மதகுகள் திறக்கப் பட்டதும் ,வெள்ளம் பெருக்கெடுத்த கிருஷ்ணா நதி குண்டூர் மற்றும் விஜயவாடாவை அடைந்த போது நேராகப் போய் கடலில் கலக்காமல் , பக்கக்கரைகளை உடைத்துக் கொண்டு ஆயிரக் கணக்கான விளைநிலங்களை மூழ்கடித்து அங்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இதற்குக் காரணம், விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச நீர் எடுப்பதற்காக நதியிலிருந்து நேரடியாக பைப்புகளப் பதிக்கக் கரைகளைத் தோண்டி பலகீனமாக்கி விட்டதுதான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்-தடுக்க வேண்டிய அதிகாரிகள் கையைக் கட்டிக் கொண்டு காசு பார்த்ததின் விளைவுதான் இது .



அடுத்ததாக கிருஷ்ணா நதி வங்கக் கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் ரேப்பள்ளி என்ற இடத்தில் சில சமூக விரோதிகள் தங்கள் இடங்களுக்குத் தண்ணீர் புகுவதைத் தடுக்க கரைகளை உடைத்ததால் அங்கும் வெள்ளக்காடு என்பது அடுத்த சோகம்.இதை அரசு இப்போது தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறது!!!!.

இப்படி ஒட்டு மொத்த அசிரத்தையாலும், அசட்டையாலும் ,பேராசையலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட பேரிழப்புகளை தேசிய சோகம் என்று சொல்வதை விட தேசிய அவமானம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

Tail piece :சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் பேரழிவை ஏற்படுத்திய மழை தொடங்கிய போது அதே பகுதியில் மழை வருவதற்காக ஆந்திர அரசு நிறுவனமொன்று "க்ளவுட் சீடிங்" என்று சொல்லக் கூடிய மழை விளைவிக்கும் காரியத்தைச் ( இதற்கும் , பெய்த மழைக்கும் தொடர்பில்லை என்றாலும்) செய்து கொண்டிருந்தது என்பது நல்ல நகை முரண்.

(படித்த செய்திகளிலிருந்தும் (குறிப்பாக Times of India) மற்றும் விசாரித்து அறிந்த செய்திகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது)

கி.அ.அ.அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails